தமிழக செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: தமிழ்நாடு அரசு அதிரடி

சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாக வழங்கப்படும்.

சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாக வழங்கப்படும். மேலும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அலுவலர் குழு 2017 இன் பரிந்துரையின் அடிப்படையில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், வனக் களப்பணியாளர்கள். அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு காலமுறை ஓய்வூதியம் மற்றும் ஒட்டுமொத்த தொகை வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு ஓய்வூதியம் மற்றும் ஒட்டுமொத்த தொகை உயர்த்தி வழங்கிடவும், குடும்ப ஓய்வூதியம் மற்றும் உயிரிழக்க நேரிட்டால் இறுதிச் சடங்கிற்கான செலவினம் வழங்கியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு ஓய்வூதியம், ஒட்டுமொத்த தொகையினை உயர்த்தியும், அப்பணியாளர்கள் ஓய்விற்கு பின் உயிரிழக்க நேரிட்டால் சிறப்பு குடும்ப ஓய்வூதியம் மற்றும் இறுதிச் சடங்கிற்கான செலவினத் தொகை கீழ்கண்டவாறு வழங்கலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.