நீலகிரி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த மஞ்சூர், குன்னூர் பகுதிகளில் கடந்த டிசம்பர் முதல் வாரம் உறைபனி தொடங்கியது. தற்போது பிப்ரவரி மாதத்திலும் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக நேற்று ஊட்டி குதிரை பந்தய மைதானம், காந்தல், தலைக்குந்தா, அவலாஞ்சி போன்ற இடங்களில் உறைபனி அதிகமாக காணப்பட்டது. புற்கள், இலைகள் மீது உறைபனி படர்ந்து இருந்தது. அதேபோல சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் மீது காணப்பட்ட உறைபனி வெண் பஞ்சுகளை போல் இருந்தன.
வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் உறைபனி காலநிலை இல்லாமல் இருக்கும். ஆனால், தற்போது உறைபனி காலநிலை தொடர்ந்து நீடிப்பதால் அன்றாட பணிகளை மேற்கொள்வதில் கடும் பாதிப்பு ஏற்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். அத்துடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டு உள்ளது. ஊட்டியில் கடுங்குளிரை சமாளிக்க பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். இந்த உறைபனி காரணமாக நகர பகுதிகளில் குறைந்தபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், தலைக்குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பூஜ்யம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது.