சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சட்டப்பேரவைத் தேர்தல் எனும் ஜனநாயகத் திருவிழா, கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் திரண்டு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்ய ஆயத்தமாகிவிட்டார்கள். கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு போராடிப் பெற்ற உரிமைகளை, நாம் அடைந்த வளர்ச்சிகளைக் காப்பாற்றுவதற்கான தேர்தலே, இந்த சட்டப்பேரவைத் தேர்தல்.
இந்தத் தேர்தல் தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அணிக்கும் பாசிச பா.ஜ.க. தலைமையிலான டெல்லி அணிக்கும் இடையிலான போட்டி என நம் தலைவர் ஆரம்பத்திலேயே தெளிவாக அறிவித்தார். இந்த ஜனநாயகப் போரில் தலைவரின் கட்டளையை ஏற்று, கடந்த 23 நாட்களில் 135 தொகுதிகளில் கழக வேட்பாளர்கள் மற்றும் நம் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டோம்.
நமது பிரசாரத்தை, கடந்த மார்ச் 30-ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் தொடங்கி, ஏப்ரல் 21-ம் தேதி கலைஞர் நின்று வென்ற சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் நிறைவு செய்திருக்கிறோம். சென்ற இடமெல்லாம் மக்களின் எழுச்சி, ஆரவாரம், ஆர்ப்பரிப்பு! கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளும் 'தோழமை' உணர்வுடன் ஒவ்வொரு தொகுதியிலும் உற்சாக வரவேற்பையும், ஒத்துழைப்பையும் அளித்தனர்.
தமிழ்நாட்டு மக்கள், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகுந்த அரசியல் தெளிவுடன் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். பாசிசத்தின் சூழ்ச்சிகளை எல்லாம் புரிந்து வைத்திருக்கிறார்கள். களம் உணர்த்திய செய்திகள் இவை.
தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கத் துடிக்கும் பாசிச சக்திகள் மீதும், அதற்கு பாதை அமைத்துக் கொடுக்கும் அடிமைக் கூடாரமான அ.தி.மு.க. மீதும், எடப்பாடி பழனிசாமி மீதும் மக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். பழனிசாமி என்றால் அடிமைத்தனம், பழனிசாமி என்றால் துரோகம், பழனிசாமி என்றால் சூழ்ச்சி, இது மக்களின் மனங்களில் நன்றாகப் பதிந்து இருக்கிறது.
பாசிஸ்ட்டுகளை எந்த அளவுக்கு தமிழ்நாடு எதிர்த்து நிற்கிறதோ, அதே அளவு பாசிஸ்ட்டுகளைத் தோளில் சுமந்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கும் பாடம் புகட்ட தமிழ்நாட்டு மக்கள் தயாராகிவிட்டார்கள்.
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கும், காவல் அரணாக இருக்கும், நம் கழகத் தலைவர் மீதான மதிப்பு, மக்களிடையே பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. மாநிலம் முழுவதும் நம் தலைவருக்கு ஆதரவு அலை வீசுகிறது. நமது திராவிட மாடல் அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. விடியல் பயணம், காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் திட்டம், தாயுமானவர் திட்டம், மிக முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என ஒவ்வொரு திட்டத்தைப் பற்றியும் நாம் பேசும்போது, மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், முதியோர் முகங்களில் ஏற்படும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நம்மை நெகிழச் செய்தது.
அதுமட்டுமல்ல, நம் தலைவர் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள், தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று இருக்கின்றன. இல்லத்தரசிகளுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் ரூ.8,000 மதிப்பிலான கூப்பன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2,000-ஆக உயர்த்தப்படும். புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்ட உதவித்தொகை ரூ.1,500-ஆக உயர்த்தப்படும், முதியோர் உதவித்தொகை ரூ.2,000-ஆக உயர்த்தப்படும். காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும், 35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்து இருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை, வெற்றுக் காகிதங்களாகவே மக்கள் பார்க்கிறார்கள். அவற்றின் மீதெல்லாம் மக்களுக்குத் துளிகூட நம்பிக்கை இல்லை. ஆனால், சொன்னதைச் செய்யும், நம் முதல்-அமைச்சர் தந்துள்ள வாக்குறுதிகளை மக்கள் கொண்டாடுகிறார்கள். தீவிர பரப்புரைக்கு இடையே, ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கண்டித்து, நமது தலைவர் கருப்புக்கொடிப் போராட்டத்தை அறிவித்தார்.
தமிழ்நாட்டின் அரசியல் குரலை நெரிக்க முயலும் அந்த மசோதாவுக்கு தலைவர் நாமக்கல்லில் தீ வைத்தார். நாம் மதுரையில் அந்த மசோதாவுக்கு தீ வைத்தோம். 'தமிழ்நாடு வெல்லட்டும், டெல்லி ஆதிக்கம் வீழட்டும்' என்ற போர்முழக்கம் எட்டுத்திக்கும் எழுந்தது. மறுநாள் நாடாளுமன்றத்தில் அந்த மோசடி மசோதா தோற்கடிக்கப்பட்டது என்ற வெற்றிச் செய்தியை, கோவையில் கூடியிருந்த மக்களிடம் நாம் பகிர்ந்துகொண்டபோது, வாழ்த்து முழக்கங்களும், ஆரவாரமும் அடங்க வெகுநேரம் ஆனது. இதன் மூலம், தேர்தல் பரப்புரைக் களத்தையே, போராட்டக் களமாக மாற்றி அதில் வெற்றிவாகைச் சூடி நமது தலைவர் புது வரலாறு படைத்துள்ளார்!
நாடாளுமன்றத்தில் நாம் பெற்ற இந்தச் சரித்திர வெற்றி. நாளைய சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும். 'வெல்வோம் 200' என்ற லட்சியத்தோடுதான் இந்தப் பரப்புரைப் பயணத்தை நாம் தொடங்கினோம். ஆனால், மக்களிடம் இருக்கும் எழுச்சியைப் பார்க்கும்போது, 234 இடங்களிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் வெல்லப் போகிறது. இந்த இலக்கினை நாம் அடைய, தேர்தல் நாளின் கடைசி நிமிடம் வரை மிகுந்த விழிப்போடு பணியாற்றிட வேண்டும். அதேபோல், மே 4-ம் தேதி, இறுதிச்சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை நமது தேர்தல் பணி தொடர வேண்டும்.
நமது தலைவர், கூட்டணித் தலைவர்கள் என எல்லோரும் பல நாட்களாகப் பரப்புரை செய்திருக்கிறார்கள். இந்தக் கடும் உழைப்பின் பயனை, மகத்தான தேர்தல் வெற்றியாக நாம் அறுவடை செய்திட வேண்டும். அந்தப் பொறுப்பினை உணர்ந்து, கழக நிர்வாகிகள், இளைஞர் அணி தம்பிகள் உட்பட அனைவரும் உழைத்திட வேண்டும். பாசிச சக்திகளையும் அதிமுக அடிமைக் கூட்டத்தையும் நமது வாக்கு எனும் ஆயுதத்தால் வீழ்த்துவோம்.
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்ற நம் தலைவரின் குரல் மீண்டும் ஒலிக்கட்டும். திராவிட மாடல் 2.0 மலரட்டும். நம் மண், மொழி, பண்பாட்டைப் பாதுகாத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம். தலைவர் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.