சென்னை,
தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் மதுரை சென்ற அவர் மதுரை மாவட்ட கலெக்டர், காவல் ஆணையரை அழைத்து அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தியதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், எந்த அதிகாரமும் இல்லாத கவர்னர் எந்த திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமை இல்லை. அதை தவெக அரசு என்றைக்கும் அனுமதிக்காது என கடும் கண்டனங்களை பதிவு செய்தார்.
இந்தநிலையில், சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கவர்னர் அர்லேகர் பேசியதாவது:-
மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுபவர்கள் தங்களுக்கு உதவி வேண்டுமெனில் கவர்னர் மாளிகையை அணுகலாம். நீங்கள் என்னிடம் அளிக்கும் கோரிக்கைகளை தமிழக அரசிடம் கொண்டு சென்று தீர்வுகான அறிவுறுத்துவேன்.கவர்னரிடமும் அரசிடமும் எதிர்பார்ப்பு இருந்தால் கூறுங்கள். ஒன்றிணைந்து மக்களுக்காக செயல்படுவோம்.
வாக்களித்த மக்களால் பிரச்சினைகளை உணரமுடியும், தீர்வு சொல்லவும் முடியும். என்னிடம் தீர்வுகளை சொன்னால் நான் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சரிடம் சொல்வேன். நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் இல்லாமல் போனது தான் மிகப்பெரிய பிரச்சினை என கூறி உள்ளார்.
கவர்னர் அர்லேகர் இவ்வாறு தவெக அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.