தமிழக செய்திகள்

தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்: சிங்கப்பெருமாள் கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல்!

இன்றைய தினம் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

தீபாவளி பண்டிகையைச் சொந்த ஊர்களில் குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் ஏராளமான மக்கள் தென் மாவட்டங்களை நோக்கிப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. குறிப்பாக, நேற்று முதலே கார், வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றில் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

இதனால் செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்வதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கிளாம்பாக்கத்தில் குவிந்த பயணிகள்

நேற்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இன்றைய தினம் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் விடுமுறை காரணமாகப் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

இதையடுத்து, கிளாம்பாக்கம் முதல் ஜி.எஸ்.டி. சாலை வரையிலான பகுதிகளில் தாம்பரம் மாநகர காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் தென் மாவட்டங்களை நோக்கிச் செல்வதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.

3 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுப்பு

குறிப்பாக, பொத்தேரி முதல் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகள் வரை சுமார் 3 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணத்தைத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது.

SCROLL FOR NEXT