தமிழக செய்திகள்

விஜய் வெற்றியை கொண்டாடிய சொந்த ஊர் மக்கள்

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தமிழ்நாடு முதல்வர் ஆவது பெருமையாக உள்ளது என்று விஜய்யின் சொந்த ஊர் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இராமநாதபுரம்,

தமிழக சட்டசபை தேர்தல் முடிவு நேற்று முன்தினம் வெளியானது. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே த.வெ.க. முன்னிலை வகித்ததால் நொடிக்கு நொடி பரபரப்பாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல த.வெ.க. வெற்றி உறுதி செய்யப்பட்டது.

108 தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தமிழகம் முழுவதும் அக்கட்சியின் தொண்டர்கள் வெடி, வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் விஜய். இந்த கிராமத்தில் தான் விஜய்யின் அப்பா மற்றும் தாத்தா சேனாதிபதி பிள்ளை பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். பின்னர் தந்தையின் சினிமா பயணத்திற்காக சென்னைக்கு வந்தனர்.

இப்போது விஜய் தலைமையிலான த.வெ.க. தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தகவல் அறிந்து விஜய்யின் பூர்வீக ஊரான முத்துப்பேட்டை கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். விஜய்யின் தாத்தா வழி உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள், அந்தோணியார் ஆலயத்தில் பூமாலை அணிவித்து நன்றி செலுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ்நாடு முதல்வர் ஆவது பெருமையாக உள்ளது என்று சொந்த ஊர் மக்கள் தெரிவித்தனர்.