தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் வாக்களிக்க சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, திண்டுக்கல், தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நிற்க கூட முடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது.
சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும், அனைத்திலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. நேற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், எக்மோர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதிய நிலையில், இன்றும் அதே நிலை காணப்படுகிறது.
பண்டிகை காலத்தில் ஊருக்கு செல்லும் போல், இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வதை பார்க்க முடிகிறது. பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், சிறப்பு பேருந்துகளையும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 9.55 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (06161) எழும்பூரில் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு மதுரையை சென்றடையும்.