தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் மனமகிழ் மன்றம் - மதுபானக் கடைக்கு எதிராக மக்கள் போராட்டம்

தூத்துக்குடி அய்யனார்புரம் பகுதியில் இயங்கும் மதுபானக் கடை, மனமகிழ் மன்றத்தால் பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அய்யனார்புரத்தில் இயங்கும் சட்டவிரோத மனமகிழ் மன்றம் மற்றும் மதுபானக் கடைக்கு எதிராக அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனமகிழ் மன்றம், மதுபானக் கடைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கீழ அரசடி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அய்யனார்புரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயங்கி வரும் சட்டவிரோத மனமகிழ் மன்றம் மற்றும் மதுபானக் கடைக்கு எதிராக நேற்று பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கு இடையூறு

அய்யனார்புரம் பகுதியில் இயங்கும் மதுபானக் கடை மற்றும் மனமகிழ் மன்றத்தால் பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாக நேற்று காலை முதலே திரளான பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைப்புகள், இயக்கங்கள் ஆதரவு

பொதுமக்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு பல்வேறு ஜனநாயக சக்திகள், மக்கள் நல அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன. மேலும் கீழ அரசடி, வெள்ளப்பட்டி, கோமஸ்புரம் மற்றும் அய்யனார்புரம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்றனர்.

போலீசார் குவிப்பால் பரபரப்பு

பொதுமக்களின் அமைதியான வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்தச் சட்டவிரோத நிறுவனங்களை உடனடியாக மூட மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT