சென்னை,
தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்புவதால் நகரின் முக்கிய நுழைவாயில்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய தொடர் விடுமுறைகள் முடிந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பினர். இதனால் இன்று (புதன்கிழமை) சென்னையின் முக்கிய நுழைவு வாயிலான மதுரவாயல் முதல் கோயம்பேடு வரையிலான சாலையில் வாகனங்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. ஆம்னி பேருந்துகள், அரசுப் பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களின் வரத்து ஒரே நேரத்தில் அதிகரித்துள்ளதால், போக்குவரத்து மிக மெதுவாக ஊர்ந்து செல்கிறது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (ஜி.எஸ்.டி சாலை) உள்ள செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், வண்டலூர் மற்றும் பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளிலும் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. சுங்கச்சாவடிகளைக் கடக்க வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நீண்ட தூரப் பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பும் பொதுமக்கள் மற்றும் பணிக்குச் செல்வோர் இந்த நெரிசலால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போக்குவரத்தை சீரமைக்க முக்கிய சந்திப்புகளில் கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, நெரிசலைக் குறைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.