திருப்பூர் மாவட்ட வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரான தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
த.வெ.க. அரசின் திட்டம், நோக்கம் குறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வகையில் இந்த ஆய்வுக்கூட்டம் நடந்துள்ளது. நேர்மையான, வெளிப்படையான, லஞ்சம், ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்க வேண்டும் என்பதே முதல்-அமைச்சர் விஜய்யின் நோக்கம். அதுபோல் அரசு அதிகாரிகளும் இருக்க வேண்டும் என்று அவர் இலக்கு வைத்துள்ளார். அரசின் முக்கிய அங்கமாக அரசு அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் தான் மக்களை நேரடியாக சந்தித்து சேவை செய்கிறார்கள். தூய்மையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நோக்கம். ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு துறையிலும் லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 60 ஆண்டுகளில் அரசின் துறைகள் எவ்வாறு செயல்பட்டது. இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு ஒவ்வொரு துறையும் செயல்படுகிறது என்ற வித்தியாசத்தை மக்கள் அறிய முடியும். கடந்த ஆட்சியில் தேங்கிய பணிகளுக்கு தீர்வு காணப்படும். மக்களின் தேவை படிப்படியாக நிறைவேற்றப்படும். மக்களை தேடி மருத்துவ ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி உரிய முடிவை விரைவில் எடுப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, ‘ நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவும், நலத்திட்டங்களை செயலாற்ற தேவையான நிதியை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. திருப்பூரில் தேங்கியுள்ள சாய திடக்கழிவுகளை அகற்றும் வகையில் சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் திருப்பூர் வந்துள்ளது. சாய ஆலை நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து கழிவுகளை அகற்ற உள்ளனர்.மலைவாழ் மக்களுக்கு தேவையான வசதிகள், பணிகள் வருவாய்த்துறை மூலம் 2 மாதங்களில் நிறைவேற்றப்படும். மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வினியோகம் உள்ளிட்டவை தேக்கமின்றி உரிய நேரத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
புதியவர்களாகிய எங்களுக்கு, மக்கள் கொஞ்சம் கால அவகாசம் வழங்க வேண்டும். முந்தைய ஆட்சி காலங்களை விட, த.வெ.க. ஆட்சியில் அரசு அலுவலக செயல்பாடுகளின் மாற்றம் என்ன என்பதை அனைவரும் விரைவில் கண்கூடாக காணலாம் என்றும் அமைச்சர்கள் கோரிக்கை வைத்தனர்.