சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தமிழ்நாடு கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வருகிற 26-ந் தேதி வரையில் (அதாவது இன்று முதல் 6 நாட்களுக்கு) கன முதல் மிக கனமழை வரை தொடரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
இதுதவிர வருகிற 23-ந்தேதி வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. மேலும், கனமழை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-
கனமழை எதிரொலியாக சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்நிலையில் உள்ளது. சென்னையில் 10 செ.மீ-க்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே வரவோ, மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் மக்கள் நிற்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம்.
மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் வெளியேற்றும் பணி நடைபெறுகிறது. வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் அடிப்படையில் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. மரம் விழுந்தது, மின் தடை குறித்த புகார்கள் சரிசெய்யப்பட்டு வருகிறது. மழைநீர் தேக்கம் தொடர்பாக மணலி, மாதவரத்தில் அதிக புகார்கள் வந்தது
சென்னையில் கனமழை தொடர்பாக 1913 என்ற எண் மூலம் மழை குறித்த புகார் அளிக்கலாம்
இவ்வாறு அவர் கூறினார்.