தமிழக செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் வருகை; இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை,

சென்னையைப் பொறுத்தவரை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, வணிகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னையில் தங்கியுள்ளனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் தங்களது குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் சென்னையில் இருந்து சுமார் 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். தீபாவளிக்கு மறுநாளான நேற்று (9-ம் தேதி) அரசு விடுமுறை என்பதால், சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகள் சிரமமின்றி செல்வதற்கு கிளாம்பாக்கத்தில் கூடுதலாக 300 மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

தீபாவளி முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்ப நேற்று 3,870 பேருந்துகள் இயக்கப்பட்டன. 2,191 வழக்கமான பேருந்துகள் மற்றும் 1,351 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசு பேருந்துகளில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை திரும்பினர்.

தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து, தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் சென்னை திரும்ப தொடங்கி உள்ளனர். சென்னைக்குத் திரும்பும் மக்களால் தாம்பரம் ரெயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வாகனங்கள் படையெடுத்து வருகின்றன. நேற்று முதல் சென்னைக்கு மக்கள் மீண்டும் திரும்பத் தொடங்கிய நிலையில் இதுவரை விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை 48,843 வாகனங்கள் கடந்துள்ளன.

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்புவதால் சென்னை மாநகரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

SCROLL FOR NEXT