சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் ஒரு மேயர் இடத்திலாவது தவெக வென்றால் ஒரு பக்க மீசையை எடுத்து கொள்கிறேன் ஸ்டாலினுக்கோ, உதயநிதிக்கோ சவால் விடும் தகுதி ஆதவ் அர்ஜுனாவுக்கு இல்லை; முதல்வர் விஜய்க்கு ஆபத்து வருகிறது என்றால் அதற்கு காரணம் ஆதவ் அர்ஜுனாதான்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்று ப.சிதம்பரம் கூறியிருந்தாலும், நாங்கள் காங்கிரஸ் கூட்டணியை டைவர்ஸ் பண்ணிட்டோம் சில கட்சிகள் எங்களை விட்டு சென்றாலும் எங்களோடு ஆலோசனை செய்துவிட்டு சென்றனர்; அது ஒரு வகையான டைவர்ஸ்; ஆனால் காங்கிரஸ் உடன் செய்துள்ள டைவர்ஸ் வேறு வகையானது என்றார்.
தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழக மக்கள் தேர்தலில் தோற்கடித்த ஆணவமும் அகங்காரமும் இன்னும் மாறவில்லை. மக்கள் வழங்கிய தீர்ப்பை மதித்து தங்களின் தவறுகளை சிந்திக்க வேண்டிய நேரத்தில், அதே ஆணவத்துடனும் அலட்சிய மனப்பான்மையுடனும் சிலர் தொடர்ந்து பேசி கொண்டிருக்கிறார்கள்.
ஆர்.எஸ். பாரதியின் சமீபத்திய பேச்சு, மக்கள் நிராகரித்த அதே மனநிலையையே மீண்டும் வெளிப்படுத்துகிறது. தாங்களே மக்களை விட பெரியவர்கள் என்று அரசியல்வாதிகள் நினைக்க தொடங்கும் போது, ஜனநாயகத்தில் உண்மையான அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதை மக்கள் நினைவூட்டுவார்கள்.
இந்த ஆணவ போக்கு தொடர்ந்தால் வரலாறு மீண்டும் திரும்பும். தமிழக மக்கள் அகங்காரத்தை நீண்ட காலம் சகித்ததில்லை; இனியும் சகிக்கப் போவதில்லை. இன்று ஆர்.எஸ். பாரதி என்று அழைக்கப்படலாம். ஆனால் இந்த போக்கை மாற்றி கொள்ளாவிட்டால், அடுத்த ஆண்டு மக்கள் அவரை “அரைமீசை பாரதி” என்றே நினைவுகூரும் நிலை உருவாகலாம். மக்களின் தீர்ப்பு மிகவும் தெளிவானது: மக்கள் தீர்ப்பை மதியுங்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.