தமிழக செய்திகள்

பெரம்பூர்: சூட்கேஸில் இருந்த ஆண் சடலம்.. குற்றவாளிகள் சிக்கியது எப்படி..? போலீசார் வெளியிட்ட பரபரப்பு தகவல்

கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் கடந்த 5-ம் தேதி காலை 8 மணியளவில், சென்டிரலில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணத்துக்கு மின்சார ரெயில்கள் செல்லும் 4-வது நடைமேடையில் இருந்து பெரம்பூர் ஜமாலியாவுக்கு இறங்கி செல்லும் படிக்கட்டு அருகே நீலநிற டிராலி சூட்கேஸ் ஒன்று நிமிர்த்து வைக்கப்பட்டு இருந்தது.

ரெயில் பயணிகளுக்கு இடையூறாக, நீண்டநேரம் கேட்பாரற்ற நிலையில் இருந்த அந்த சூட்கேஸ் பற்றி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசாரிடம் பயணிகள் சிலர் தெரிவித்தனர். உடனடியாக ரெயில்வே போலீசார், ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் யாராவது, அவசரமாக ரெயிலில் ஏறும்போது அந்த சூட்கேசை தவறவிட்டு சென்றிருக்கலாம் என்று கருதி, அதை ஓரமாக எடுத்து வைக்க முயன்றனர்.

ஆனால் அந்த சூட்கேஸ், வழக்கத்துக்கு மாறாக அதிக பாரமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் உடல், சிவப்பு நிற பாலிதீன் பையில் சுற்றப்பட்டு, சாக்குமூட்டையில் கட்டி, அந்த சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. கை மற்றும் கால்கள் முழங்கால் வரை துண்டிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரத்தம் உறைந்தும், உடல் சற்று அழுகிய நிலையிலும் காணப்பட்டது. இதுதொடர்பாக தீவிர விசாரணையை போலீசார் தொடங்கினர்.

அப்போது கொலை செய்யப்பட்ட நபர் அமீர் அலி என்பதும், உடலை கொண்டு வந்து போட்டது அந்த நபரின் மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் என்பது தெரியவந்தது. கைதான இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பெரம்பூர் ரெயில் நிலைய சூட்கேஸ் கொலை வழக்கில் துப்பு துலக்கியது எப்படி? என்பது குறித்து போலீசார் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பெரம்பூர் ரெயில் நிலைய சூட்கேஸ் பிண வழக்கு எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. ஒரே நாளில் இந்த வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளை நெருங்கினோம். அறிவியல் ரீதியாகவும், சந்தர்ப்ப தகவல்கள் அடிப்படையிலும் துப்பு துலக்கினோம். நீல நிற சூட்கேசில் பிணம் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.

ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்யவில்லை. எனவே ரெயில் நிலையத்துக்குள் வெளியே உள்ள 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தோம். ஒரு கேமரா காட்சியில் வாடகை ஆட்டோ ஒன்றில் இருந்து ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து குறிப்பிட்ட நீல நிற சூட் கேசை இறக்கி ரெயில் நிலையம் நோக்கி கொண்டு வந்த காட்சி மூலம் தெரிய வந்தது. அதை வைத்து ஒரு ஆணும், பெண்ணும் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதை முடிவு செய்தோம்.

காட்டி கொடுத்த டிரவுசர்

சூட்கேசில் இருந்த உடலில் டிரவுசர் ஒன்று இருந்தது. அதில் ஒரு நம்பர் இருந்தது. அந்த நம்பரை வைத்து, அந்த டிரவுசரை எந்த கடையில் வாங்கினார்கள் என்பது பற்றி விசாரித்தோம். அந்த குறிப்பிட்ட ஜவுளி கடையை விசாரித்த போது. குறிப்பிட்ட நம்பர் உள்ள டிரவுசரை ஒரு ஆணும், பெண்ணும் (அமீர் அலியும், ரோகிமாவும்) வாங்கி சென்றதாக கடைக்காரர்கள் கூறினார்கள்.

வாட்ஸ் அப்பில் புகைப்படம்

அவர்கள் பில் போடும் போது கொடுத்த செல்போன் எண்ணை கடைக்காரர்கள் போலீசாரிடம் கொடுத்தனர். அந்த 2 செல்போன் எண்களும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. அந்த செல்போன் எண்ணை வைத்து. அந்த குறிப்பிட்ட ஆணும், பெண்ணும் தேனாம்பேட்டை தாமஸ் நகரில் வசிப்பதை உறுதி செய்தோம்.

அந்த செல்போன் எண் 'வாட்ஸ் அப்'பில் ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. அந்த பெண்ணின் புகைப்படத்தை காட்டி தேனாம்பேட்டை தாமஸ்நகர் பகுதியில் விசாரித்தோம். அப்போது தான் அந்த பெண் யார் என்பதை அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அந்த பெண் வீடு பூட்டிக்கிடந்தது.

வாக்குமூலம்

அந்த பெண்ணின் செல்போனுக்கு மீண்டும் தொடர்புகொண்டோம். அப்போது அந்த பெண் செல்போனை எடுத்து பேசினார். நாங்கள் வெளிமாநிலத்தில் இருந்து ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்துள்ளோம். எங்களுக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என்று கூறினோம். அவரும் அதை உண்மை என்று நம்பி எங்களை தியாகராய நகருக்கு வர சொன்னார்.

தியாகராய நகரில் அவர் சொன்ன இடத்தில் வைத்து அந்த பெண்ணை சந்தித்தோம். அவர்தான் கொலையாளி ரோகிமா. அவரை கைது செய்தோம். அவர் சொன்ன தகவல் அடிப்படையில் அஸ்ரப் அலியையும் பிடித்தோம். அவர்கள் 2 பேரும் கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்தனர். அவர்கள் சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் கொலை செய்யப்பட்டவரின் தலை உள்ளிட்ட உடல் பாகங்களை மீட்டோம்.

கள்ளக்காதல்

கள்ளக்காதல் பிரச்சினையில் இந்த கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. உடலை ஏற்றி வந்த வாடகை ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தி ரோகிமாவும், அஸ்ரப் அலியும்தான் உடல் உள்ள சூட்கேசை கொண்டு வந்ததை உறுதிப்படுத்தினோம். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அதிகாரி கூறினார்.