தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வாசனை ஷேம்புகள் பறிமுதல்: ஆட்டோ ஓட்டுனர் கைது

தூத்துக்குடி இனிகோநகர் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடப்பதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இனிகோநகர் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடப்பதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.

வாசனை ஷாம்புகள் இலங்கைக்கு கடத்த முயற்சி:

அப்போது இனிக்கோநகர் கடற்கரையின் தெற்கு புறம் உள்ள கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலையில் படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக, ஒரு ஆட்டோவில் 8 மூட்டைகளில் வாசனை ஷாம்பு, 51 அட்டைப் பெட்டிகளில் மொத்தம் 48,960 எண்ணிக்கையில் இருப்பது தெரியவந்தது.

ரூ.5 லட்சம் மதிப்புள்ள வாசனை ஷாம்புகள் பறிமுதல்; கைது:

அதைத் தொடர்ந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள அந்த வாசனை ஷாம்புகளை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார், அப்போது பிடிபட்ட ஆட்டோ ஓட்டுனரான தூத்துக்குடி தாளமுத்துநகர், வெள்ளைப்பட்டி, அந்தோணியார் கோவில் தெருசை் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் மரிய நிசாந்தன் (வயது 32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.