சென்னை,
பெரியார் அறிவுலகம் ஊழல் விவகாரத்தில் பொது நூலகத்துறை இயக்குநரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரத்தில் தி.மு.க. ஆட்சியில் ரூ.300 கோடியில் 'பெரியார் அறிவுலகம்' கட்டப்பட்டது. இந்த நூலகத்தை முதல்- அமைச்சர் கடந்த மாதம் விஜய் திறந்து வைத்தார். இந்த நூலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டினார்.
நூலகத்தின் 4-வது தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவில், 'அகல்விளக்கு பதிப்பகம்', 'பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ்' உள்ளிட்ட பதிப்பகங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் தரமற்ற முறையில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் தவறான வரலாற்றுத் தகவல்கள் இருப்பதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதையடுத்து, நூல் கொள்முதல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் நூலகத்தின் 4-வது தளத்தில் வைக்கப்பட்டிருந்த 'அகல்விளக்கு', 'பீனிக்ஸ்' பதிப்பகங்களின் புத்தகங்கள் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் பொது நூலகத்துறை இயக்குநரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக உள்ள ஜெயந்தி ஐ.ஏ.எஸ். பொது நூலகத்துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் ஜெயந்தி ஐ.ஏ.எஸ். கூடுதல் பொறுப்பு வகித்து வந்த பொது நூலகத்துறை இயக்குநர் பதவி திரும்பப் பெறப்பட்டது. பொது நூலகத்துறையின் புதிய இயக்குநராக ஷஜீவனா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.