சென்னை,
கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை ஐகோர்ட்டு 23-ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் இ.பரந்தாமன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில்,அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,
இந்த புத்தக கொள்முதலில், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என கடந்த 7-ந்தேதி, நான் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தேன். ஆனால், இதுவரை எந்தவொரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் மதுரை அமர்வு வழக்கை விசாரித்து, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வழக்கு நாளை மதுரை அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அகல் விளக்கும் பதிப்பக பதிப்பாளர் மோகனை கைது செய்துள்ளது. புத்தக கொள்முதல் தொடர்பாக பொது நூலகத்துறை இயக்குநரிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும், அந்த விவரங்கள் அனைத்தும் மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்படட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில், ஏராளமான ஆதாரங்களை வைத்துள்ள பரந்தாமனை, சாட்சியாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, ஏற்கெனவே இதுதொடர்பான வழக்கை மதுரை அமர்வு விசாரித்து வருகிறது. ஒருவேளை, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை மதுரை அமர்வு கண்காணிக்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், இந்த வழக்கை மதுரை அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கலாம் என தெரிவித்த நீதிபதி, மதுரை அமர்வில் நாளை வழக்கு விசாரணைக்கு வரும்போது, பரந்தாமன் மனுத்தாக்கல் செய்துள்ள விவரத்தை தெரிவிக்க வேண்டும் என காவல்துறை தரப்புக்கு அறிவுறுத்தி, மனு மீதான விசாரணையை 23-ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.