தமிழக செய்திகள்

கோவையில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலக கட்டிடம்: இன்று திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்

முதல்- அமைச்சர் வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை,

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். அவர் 10 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ செல்கிறார்.

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 7 தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவியல் மையம் உள்ளது.

பெரியார் நூலகத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு 11 மணிக்கு கோவை விமானம் நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், கலெக்டர், அதிகாரிகள் மற்றும் த.வெ.க.வினர் வரவேற்பு அளிக்கிறார்கள்.

ரோடுஷோ

பின்னர் அவர், அவினாசி ரோடு வழியாக விழா நடைபெறும் காந்திபுரத்துக்கு 10 கிலோ மீட்டர் தூரம் ரோடுஷோ சென்றபடி மக்களை சந்திக்கிறார். காலை 11.45 மணிக்கு நூலகத்தின் முகப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார் அறிவுலகம் கல்வெட்டை திறந்து வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து அறிவுலகத்தில் உள்ள வரவேற்பறை, அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், புத்தகம் படிக்கும் பிரிவு, அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.

புதிய பணிகளுக்கு அடிக்கல்

பின்னர் நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுஉள்ள விழா மேடைக்கு செல்கிறார். அங்கு அவரை அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்று நினைவுப்பரிசு வழங்குகிறார்கள். இதையடுத்து கோவை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்.

அதோடு புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி 100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

கோவையில் முதன்முறையாக..

முதல்-அமைச்சராக விஜய், பதவியேற்ற பின் கோவையில் நடைபெறும் அரசு விழாவில் முதன்முறையாக பங்கேற்க உள்ளார். எனவே அவரை வரவேற்கவும், பார்க்கவும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவினாசி சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் விஜய் வருகையால் த.வெ.க.வினர் உற்சாகம் அடைந்து உள்ளனர். அவரை வரவேற்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். மேலும் நூலக வளாகத்தில் அழகிய புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. சாலைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது.

டிரோன்கள் பறக்க தடை

முதல்- அமைச்சர் வருகையையொட்டி கோவையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. விமான நிலையம் முதல் காந்திபுரம் நூலகம் வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் அந்த பகுதியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கேரளா செல்லும் விஜய்

கோவையில் விழா முடிந்ததும் மதியம் 2 மணியளவில் கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கேரளம் மாநிலம் திருச்சூருக்கு செல்கிறார். அங்கு அவரது நண்பர் வீட்டில் நடக்கும் நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

திருச்சூர் செல்லும் முதல்-அமைச்சர் விஜய், குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோவை விமான நிலையத்திற்கு வந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னை செல்கிறார்.

SCROLL FOR NEXT