தமிழக செய்திகள்

பெரியார் அறிவுலக விவகாரம்; அதிகாரிகள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை? - காவல்துறைக்கு ஐகோர்ட்டு கேள்வி

எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் மீது காவல்துறை வேகமாக செயல்படுவது ஏன்? என நீதிபதி காவல்துறைக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

கோவை,

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைக்கேடு தொடர்பாக அரசு அதிகாரிகள் மீது ஏன் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை? என காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

புத்தக கொள்முதல் முறைகேடு

சென்னை ஐகோர்ட்டில் இன்று நீதிபதி லட்சுமி நாராயணன் தலைமையிலான அமர்வில் நடந்த வழக்கு விசாரணையின்போது, கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கான புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பான வழக்கை குறிப்பிட்டு, காவல்துறை தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி சில கேள்விகளை முன்வைத்தார்.

அரசு அதிகாரிகள்

அப்போது அவர், “அரசு அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் உதவி இல்லாமல் எப்படி அரசியல்வாதிகளால் லஞ்சம் பெற முடியும்? பெயர் தெரியாத பதிப்பகங்களிடம் இருந்து புத்தகங்களை கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்தது யார்? என்ற விஷயத்தை கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில தொடர்புடைய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மீது ஏன் இதுவரைக்கும் வழக்கு பதிவு செய்யவில்லை? ஆனால் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் மீது காவல்துறை வேகமாக செயல்படுகிறதே?” என்று நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

தீவிர விசாரணை

இதற்கு காவல்துறை தரப்பில், “புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இது சம்பந்தமான அனைத்து விவரங்களையும் சேகரித்து, திரட்டி அதை விரிவான பதில் மனுவாக திங்கட்கிழமை தாக்கல் செய்கிறோம்” காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT