சென்னை,
கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்துக்கு ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கோவை மாநகரின் புதிய அடையாளமாக மாறியுள்ள 'பெரியார் அறிவுலகம்' கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் ரூ.301 கோடி செலவில் மிகப் பெரிய அளவில் கட்டிமுடிக்கப்பட்டு, ஆட்சி மாறிய காரணத்தால் கடந்த சில மாதங்கள் திறக்கப்படாமல் தள்ளிப் போடப்பட்டு, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி அன்று தற்போதைய முதல்-அமைச்சர் திறந்து வைக்கப்பட்டது.
1.5 லட்சம் புத்தகங்களைக் கொண்ட நூலகமாக மட்டுமல்லாமல், அறிவியலின் உச்சமான விண்வெளி அறிவியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் "பெரியார் அறிவுலகம்” வெகுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மற்றும் கோவையைச் சுற்றியுள்ள பலரும் இதனைப் பார்வையிட விரும்பி, கடந்த நான்கு நாட்களாகப் படையெடுத்துள்ளனர். இதில் கடந்த இரண்டு நாட்கள் (அக். 19, 20) ஆயுத பூஜை, விஜயதசமி என்ற பெயரில் விடுமுறை விடப்பட்டுள்ளது மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
தந்தை பெரியாரின் பெயரில் அமைந்துள்ள அறிவியல் உலகமான 'பெரியார் அறிவுலகத்'திற்கு மதப் பண்டிகையின் பெயரால் விடுமுறையா? என்று நாம் கூட அல்ல... பக்தியாளர்களும் மற்றும் பொதுமக்களும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். தந்தை பெரியார் என்பவர் யார்? அவருடைய கொள்கைகள் என்ன? என்று தெரிந்து கொண்டு தான் நம் மக்கள் பெரியாரை ஏற்றுள்ளனர்.
பெரியாரின் கொள்கையைப் பின்பற்றுபவர் முழுமையான பகுத்தறிவாளராக, பிசகின்றி பெரியாரைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என்பதை எப்போதும் தமிழர்கள் எதிர்பார்ப்பார்கள். அதனால்தான், 'பெரியாரைப் பின்பற்றுகிறோம்' என்று சொல்வோர் ஏதேனும் அதிலிருந்து வழுவினால், 'அவர் வழுவிவிட்டாரே' என்று பக்தியாளர்கள் கூட மகிழ மாட்டார்கள். மாறாக, “ஒரு பகுத்தறிவாளர், பெரியார் பற்றாளர் இப்படி இருக்கலாமா?" என்று கேள்வி கேட்பார்கள். தங்களால் பெரியாரை முழுமையாகப் பின்பற்ற முடியவில்லை என்றாலும், பெரியாரைப் பின்பற்றுவோர் சரியானவர்களாக இருக்க வேண்டும் என்பதே இந்த இயக்கம் குறித்து மக்கள் உருவாக்கிக் கொண்டுள்ள மதிப்பீடு - அதுதான் இந்த இயக்கத்திற்கான பெருமையும் கூட! அப்படி வழுவிய 'பெரிய மனிதர்கள்' சிலரை மக்கள் தங்கள் நினைவிலிருந்தே அகற்றிவிட்டனர்.
இதே மனநிலைதான் 'பெரியார் அறிவுலகத்'தைக் குறித்தும் மக்களுக்கும், நமக்கும்! அறிவுக்குப் பொருந்தாத பண்டிகைக்குப் பெரியார் அறிவுலகத்துக்கு விடுமுறை விடலாமா? 'சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் இயங்கும்போது, பெரியார் அறிவுலகத்துக்கு விடுமுறை ஏன்?' என்று மேனாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சுட்டிக் காட்டியுள்ளார்.
விடுமுறைக் காலங்களில் தான், குழந்தைகள், குடும்பத்தினருடன் அனைவரும் சென்று வர வாய்ப்பிருக்கும். அப்படிப்பட்ட காலத்தில் விடுமுறை விடுவதால் பயன் என்ன? அடுத்து, வரவிருக்கும் தீபாவளி போன்ற மதப் பண்டிகைகளுக்கு 'பெரியார் அறிவுலகத்துக்கு அரசு விடுமுறை விடக்கூடாது. பணியாளர்களுக்கு அதற்கு மாற்றாக, வேறு நாட்களில் விடுமுறை வழங்கலாம். அல்லது தேவையான நாட்களில் விடுமுறை எடுத்துக் கொள்ள வழிவகுக்கலாம்.
மக்களின் கருத்தையும், நமது கருத்தையும் த.வெ.க. அரசும், அதன் முதல்-அமைச்சரும் கருத்தில் கொள்ள வேண்டும். "பெரியார் வெறும் படமல்ல; பாடம்” என்பதை மக்கள் உணர்வார்கள்; அனைவருக்கும் உணர்த்துவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.