சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் நெல்லை, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு மிகப்பெரிய அளவில் கருங்கல் பாறைகள், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. முந்தைய திமுக ஆட்சியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த காட்பாதரின் ஆதரவுடன் கனிமவளக் கடத்தல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று தவெக அரசு பொறுப்பேற்ற சில நாள்களிலேயே வலியுறுத்தியிருந்தேன்.
அதைத் தொடர்ந்து சில குவாரிகளுக்கு கனிமவளத்துறை அமைச்சரே நேரில் சென்று ஆய்வு நடத்தினாலும் கனிமக் கொள்ளையும், கடத்தலும் குறையவில்லை. தமிழகத்தில் பற்றாக்குறை காலங்களில் கனிமவளங்களை கேரளத்திற்கு கொண்டு செல்லக் கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, நிரந்தரத் தடை இன்று வரை அரசால் விதிக்கப்படவில்லை; அதனால் உடனடியாக கனிமக் கடத்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன்.
அதன் தொடர்ச்சியாகத் தான் வெளி மாநிலங்களுக்கு கனிமங்களைக் கடத்திச் செல்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தற்காலிகமானதாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது. இந்தத் தடை முழு அளவில் செயல்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொறுத்தி கனிமவளங்கள் கடத்தப்படுகின்றனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, இப்போது 3 மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக மாற்ற வேண்டும். மேலும், கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.