சென்னை,
ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4,724 செவிலியர் பணியிடங்களை தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் 4.75 லட்சம் செவிலியர்கள் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், அப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அறிவிப்பாணையை வெளியிட்டிருக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாடு அவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பிறகும் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், புதிதாக பணிக்கு எடுப்பவர்களையும் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்க முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, தற்காலிக அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பாணையை உடனடியாக ரத்து செய்துவிட்டு, அரசு மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் காலிப்பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் பதிவுசெய்து காத்திருப்போரை கொண்டு நிரப்பிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.