சென்னை,
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'ஓம்' திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் விஜய்க்கும் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பல்வேறு துறைகளை சேர்ந்த பலரின் கூட்டு உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவாவது. அத்தகைய திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு, திரையரங்குக்குச் சென்று திரைப்படங்களைப் பார்ப்பதும், அதன் மூலம் திரையுலகின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதும்தான்.
நாளை வெளியாகவிருக்கும் 'ஓம்' திரைப்படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் விஜய்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள். காலை 6 மணி காட்சிக்கு வருகை தரும் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்புடனும், பொறுப்புடனும், அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். திரைப்படத்தைப் பார்த்து மகிழ்வதே உண்மையான கொண்டாட்டம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளில் இருந்து ஒரு வாரத்துக்கு, தினசரி காலை 6 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை காட்சிகள் திரையிடலாம் என சமீபத்தில் முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.