தமிழக செய்திகள்

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

இன்று காலை முதற்கட்டமாக ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. இதனால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது இந்நிலையில், நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை குறைந்து அருவிகளுக்கு நீர்வரத்து சீரானது.

இதைத்தொடர்ந்து இன்று காலை முதற்கட்டமாக ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.சிறிது நேரத்தில் குற்றாலம் மெயின் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குற்றால அருவிகளில் குவிந்து உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால், குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கண்காணிப்புப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.