சென்னை,
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்கு பக்தர்கள் சார்பில் நன்றி என்று அண்ணாமலை தெரிவித்தார். இது தொடர்பாக, 'வீ த லீடர்ஸ்' அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டிற்கு, முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த பாரம்பரிய நடைமுறைகளையும், பக்தர்களின் நீண்டகால கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை சுப்ரீம் கோர்ட்டு வழங்கும் என நம்புகிறோம்.
மேலும், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.