சென்னை,
புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசுக்கு வீட்டில் சமைத்த உணவை வழங்க அனுமதி அளித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடாக பணம் வசூலித்தது தொடர்பான வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல் வகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக அன்பில் மகேஷை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்த சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், அவருக்கு முதல் வகுப்பு சிறை வழங்கவும், அவரது உடல் நலனுக்கு ஏற்ப கொழுப்பு குறைந்த, புரதச்சத்து குறைந்த உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தனக்கு நீதிமன்ற உத்தரவின்படி, உணவு வசதிகள் வழங்கப்படாததால், ஐந்து நாட்களில் 3 கிலோ எடை குறைந்து விட்டதாகவும், அதனால் உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, வீட்டில் சமைத்த உணவை அனுமதிக்க வேண்டுமென அன்பில் மகேஷ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ ஆவணங்களை காவல்துறை மறுக்கவில்லை. விசாரணை கைதி என்ற அடிப்படையில் அவரது உடல் நலனுக்கு ஏற்ற வகையிலான உணவு உள்ளிட்ட மருத்துவ வசதிகளை பெற அவருக்கு உரிமை உள்ளது என தெரிவித்தார்.
மேலும், அன்பில் மகேஷை நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். சிறையில் வசதிகள் இருந்தால் அவருக்கு என தனியாக உணவு சமைத்து வழங்க வேண்டும், இல்லாவிட்டால் வீட்டில் சமைத்த உணவை அவருக்கு வழங்கலாம். அதற்கு முன் அந்த உணவின் தரத்துக்கு அவரே பொறுப்பு என உத்தரவாதம் பெற வேண்டும் என புழல் சிறை கண்காணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.