சென்னை,
பெருங்குடி மண்டலத்தில் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம், ரூ.4.81 கோடி மதிப்பீட்டில் 2 நவீன மாடுகள் காப்பகங்களை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செ. கமலி இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், வார்டு-188க்குட்பட்ட தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் மூலதன நிதியில் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் செல்லப் பிராணிகள் சிகிச்சை மையத்தினையும், ரூ.2.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன மாடுகள் காப்பகத்தினையும், வார்டு-184க்குட்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்குத் தெருவில் மூலதன நிதியில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன மாடுகள் காப்பகத்தினையும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செ. கமலி இன்று (09.09.2026) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் 563.37 ச.மீ. பரப்பளவில் மூலதன நிதியில் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தில் நாய்களுக்கான 100 கூண்டுகள் மற்றும் 50 அறைகளும், நாளொன்றுக்கு 20 அறுவை சிகிச்சைகளும், மருத்துவர் அறை, அறுவை சிகிச்சை அறை, மருந்தகம், செல்லப்பிராணிகள் சிகிச்சை அறை, சமையலறை, உதவியாளர் அறை மற்றும் கழிவறை உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் 1003.52 ச.மீ. பரப்பளவில் மூலதன நிதியில் ரூ.2.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன மாடுகள் காப்பகமானது 100 எண்ணிக்கையிலான கால்நடைகளை பராமரிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர் அறை, மருந்தகம், சிகிச்சை அறை, தீவனக் கிடங்கு மற்றும் கழிவறை உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்குத் தெருவில் 941 ச.மீ. பரப்பளவில் மூலதன நிதியில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன மாடுகள் காப்பகமானது 120 எண்ணிக்கையிலான கால்நடைகளை பராமரிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர் அறை, மருந்தகம் அறை, சிகிச்சை அறை, தீவனக் கிடங்கு, கழிப்பறை மற்றும் குளியலறை உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் மற்றும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பெருங்குடி மண்டலம், வார்டு-188க்குட்பட்ட தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் புதிதாக கட்டப்பட்ட நாய்கள் கருத்தடை மையம் மற்றும் செல்லப்பிராணிகள் மருத்துவமனை இன்று திறந்து வைக்கப்பட்டது.
ஏற்கனவே பெருநகர சென்னை மாநகராட்சியில் புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர், செட்டிமேடு 1 மற்றும் 2, திருவொற்றியூர், மாதவரம், கண்ணப்பர் திடல், பெருங்குடி மற்றும் நந்தம்பாக்கம் ஆகிய 12 நாய்கள் கருத்தடை சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அம்பத்தூர் மண்டலத்தில் அத்திப்பட்டு மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உயிரி எரிவாயு நிலையம் ஆகிய 2 இடங்களில் நாய்கள் கருத்தடை சிகிச்சை மையம் மற்றும் செல்லப்பிராணிகள் மருத்துவமனை கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.
சென்னை மாநகராட்சியில் தெருக்களில் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு மாடு பிடிக்கும் வாகனம் ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 5 மாடு பிடிக்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 15 மண்டலங்களிலும் 18 இடங்களில் சுமார் 2,000 மாடுகளை பராமரிப்பதற்கான நவீன மாடுகள் காப்பகங்கள் அமைக்கப்படும் பணி மேற்கொள்ளப்பட்டு, டி.பி.பி சாலை, அரியலூர்-தீயம்பாக்கம், காமராஜர் சாலை, சி.எம்.டி.ஏ டெர்மினல், பேசின் பிரிட்ஜ் சாலை, பாடி பிர்ட்ஜ் அருகில் உள்ள சிவசக்தி நகர், பீட்டர்ஸ் சாலை, நந்தம்பாக்கம்-எம்.ஜி.ஆர் சாலை (2 இடங்கள்), வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்கு தெரு, பயோ சிஎன்ஜி பிளான்ட் அருகில் என 11 நவீன மாடுகள் காப்பகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1,230 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இன்று தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்கு தெருவில் இரண்டு நவீன மாடுகள் காப்பகங்கள் திறந்து வைக்கப்பட்டது. இதில் 220 மாடுகள் பராமரிக்கப்படும்.
மேலும், திருவொற்றியூரில் உள்ள டி.பி.பி சாலை, ராயபுரத்தில் உள்ள மூர் மார்க்கெட், அம்பத்தூரில் உள்ள என்.ஆர்.எஸ்.ரோடு, கிருஷ்ணாம்பேட்டை, சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயில் அருகில் என 5 இடங்களில் புதிய காப்பகங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில் 550 மாடுகள் பராமரிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.