தமிழக செய்திகள்

மணக்குடியில் "பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம்" திறப்பு: மு.க.ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை நன்றி

மணக்குடியில் ரூ.29.01 கோடி மதிப்பீட்டில் புதிய "பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம்" இன்று திறந்து வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மயிலாடுதுறை, மணக்குடியில் சுமார் ரூ.29.01 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய ‘பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம்” இன்று திறந்து வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

28 பேருந்து நிறுத்துமிடங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் உருவாகியுள்ள இந்த நவீன பேருந்து நிலையம், மயிலாடுதுறை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

மக்கள் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெயரில் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது மிகவும் பொருத்தமானது.

இந்த முக்கியமான திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.