சென்னை,
கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிகளுக்கு அனுமதி பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சட்டமன்றத்தில் தெரிவித்த நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, அந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த ஆக. 24-ந்தேதி சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் மரிய வில்சன், பள்ளிகளுக்கு அனுமதி பெற லஞ்சம் வாங்கப்பட்டதற்கு தானே நேரடி சாட்சி என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, லஞ்சம் கொடுத்ததாக அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் கே. சிவசுப்பிரமணியம் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், லஞ்சம் வாங்குவது மட்டுமின்றி கொடுப்பதும் குற்றம் என்பதால், அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி கடந்த ஆகஸ்டு 26-ந்தேதி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், சட்டமன்றத்தில் அமைச்சர் தெரிவித்த கருத்தை வெறும் அரசியல் பேச்சாக கருத முடியாது என்றும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பு, சட்டமன்றத்துக்கு வெளியே நடைபெற்றதாக கூறப்படும் நிகழ்வுகளுக்கு பொருந்தாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தனது புகாரின் அடிப்படையில் அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான மனு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.