மதுரை,
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்கக்கோரிய மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிரந்தர கட்டிடம் தோப்பூரில் இன்னும் முழுமையாக கட்டப்படவில்லை. இதனால், அங்கே படிக்கும் மாணவர்கள் ராமநாதபு ரம் அரசு மருத்துவ கல்லூரியில் தற்காலிகமாக வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். இதற்கிடையே மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. 2018-ம் ஆண்டு 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என கூறப்பட்டது. 2021-ம் ஆண் டில், 36 மாதங்களில் முடிக்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒப்படைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை பயன்பாட்டுக்கு வரப்படவில்லை. எனவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், இந்த விவகாரத்தில் தவறான உறுதியை அளிக்கும் அரசு அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், "மனுதாரர் ஒரே கோரிக்கைக்காக மீண்டும், மீண்டும் கோர்ட்டை அணுகுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை முடித்து, நிர்வாக பணிகள் மற்றும் பிற பணிகளுக்கான அனைத்து தேவைகளையும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்பது ஒரு நீண்ட கால நடைமுறை. ஏற்கனவே அவருக்கு ஐகோர்ட்டு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு அதை ரூ.5 ஆயிரமாக குறைத்துள்ளது" என எச்சரித்து அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.