திருநெல்வேலி,
நெல்லையில் ஒரு தலைவரின் நினைவு பீடம் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் இருந்து தச்சநல்லூர் செல்லும் சிவசக்தி சாலையில் ஊருடையான் குடியிருப்பு பகுதியில் 2 சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் முத்துராமலிங்க தேவரின் நினைவு பீடம் உள்ளது. அந்த பீடத்தின் அருகே நேற்று நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டினை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் இதுகுறித்து தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது, அந்த இடத்தில் கண்ணாடி பாட்டில் துகள்கள், திரி ஆகியவை சிதறிக் கிடந்தது தெரிய வந்தது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மதுபாட்டிலில் பெட்ரோல் நிரப்பி திரி வைத்து, அதில் தீ பற்ற வைத்து மர்ம நபர்கள் அந்த பீடத்தின் மீது வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகள் மூலம் போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் அப்பகுதியைச் சேர்ந்த சீனிவாசராஜா மகன் ஆகாஷ்ராமதுரை (வயது 22) மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சந்தனக்குமார்(21) ஆகிய 2 பேரும் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் உடனடியாக போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதையடுத்து இன்று அதிகாலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு), நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதனிடையே பெட்ரோல் குண்டு வீசிய 2 பேரும் ரவுடிகள் பட்டியலில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவது விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை சந்திப்பு ஊருடையான்குடியிருப்பு பகுதியில் இரண்டு சமுதாயத்தினரும் வசித்து வரும் குடியிருப்புகளுக்கு நடுவில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தை இரண்டு சமுதாயத்தினரும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தனிப்பட்ட நபர்கள் யாருக்கும் அதில் உரிமை இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இடத்தில் ஒரு தரப்பினர் கூரை அமைக்க நடவடிக்கை எடுத்ததாகவும், அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் அந்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆத்திரமடைந்ததை தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்திருக்கலாம் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.