தமிழக செய்திகள்

சென்னையில் அ.ம.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் வீட்டின் மீது திடீரென மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது.

சென்னை வியாசர்பாடி, இந்திராகாந்திநகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். அ.ம.மு.க. பிரமுகரான இவர், எண்ணெய் விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பாலமுருகன் வீட்டின் மீது திடீரென மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் சத்தம் கேட்டதை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தனர்.

அப்போது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் அது வெடித்து சிதறிய காட்சிகளை தங்களது செல்போனில் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்ததை தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் எம்.கே.பி.நகர் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பாலமுருகன் அதே பகுதியில் அத்தோ கடை வைத்து நடத்தி வருவதும், அவரது கடையில் இருந்த குப்பைத் தொட்டியை போதையில் இருந்த 4 பேர் எட்டி உதைத்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பான தகராறின் எதிரொலியாகவே அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் நள்ளிரவில் மீண்டும் வந்து பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இது தொடர்பாக அந்த போதை ஆசாமிகள் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து அந்த 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் வியாசர்பாடி பகுதியில் நேற்று நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வீட்டின் வெளிப்பக்கச் சுவர் லேசாக சேதமடைந்துள்ளது.