நெல்லை,
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் நாய் கடித்த ஆத்திரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை மேலப்பாளையம், வீரமாணிக்கபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி சகாயசேவியர் (வயது 55). இவர் தனது வீட்டோடு சேர்த்து பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வழியாக சென்ற வாலிபரை ஒரு நாய் கடித்தது.
நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த வாலிபர், அந்தோணி சகாய சேவியர் வீட்டில் உள்ள நாய் தான் தன்னை கடித்ததாக நினைத்து, அங்கு சென்று தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ரோட்டில் கிடந்த கற்களை எடுத்து அந்தோணி சகாயசேவியரின் வீட்டுக்குள் வீசிச் சென்றுள்ளார். மேலும் ஆத்திரம் அடங்காத அந்த வாலிபர் நேற்று அதிகாலையில் ஒரு பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி எடுத்து வந்துள்ளார். அந்தோணி சகாய சேவியர் வீட்டின் சுவரில் அந்த பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டார்.
இதில் சுவரில் தீப்பிடித்து கரும்புகை படிந்தது. பயங்கர சத்தம் கேட்டு எழுந்த அந்தோணி சகாயசேவியர் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் அந்த பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். இதில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மாரித்தங்கம் (வயது 32) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை பிடிக்க போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.