தமிழக செய்திகள்

காதல் மனைவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: கணவர் உள்பட 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே குடும்பம் நடத்த வர மறுத்த காரணத்தால், கணவர் உள்பட 2 பேர் சேர்ந்து காதல் மனைவியின் பெற்றோர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே குடும்பம் நடத்த வர மறுத்த காதல் மனைவியின் பெற்றோர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய கணவர் மற்றும் அவரது நண்பரை நாலாட்டின்புத்தூர் போலீசார் கைது செய்தனர்.

காதல் திருமணம்; குடும்ப தகராறு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாமஸ் நகர் 1-வது தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டநர் முத்து கருணாநிதி (வயது 31). இவருக்கும் ஷர்மிளா(25) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். முத்து கருணாநிதி சரிவர வேலைக்கு செல்லாததால் தம்பதியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட ஷர்மிளா, தனது குழந்தையுடன் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று வசித்து வந்தார்.

மனைவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்

இதனிடையே லிங்கம்பட்டி சென்ற முத்து கருணாநிதி, ஷர்மிளாவைத் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்து கருணாநிதி, சம்பவத்தன்று மாலையில் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் லிங்கம்பட்டிக்குச் சென்றுள்ளார். அங்கு ஷர்மிளா தங்கியிருந்த வீட்டின் கதவு மீது திடீரென பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் வீட்டின் கதவு தீப்பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக திரண்டு வந்து தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தனர். இதனால் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

கணவர் உள்பட 2 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து ஷர்மிளாவின் தாயார் சுதா அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட கணவர் முத்து கருணாநிதி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது நண்பரான தாமஸ் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் முத்துப்பாண்டி(27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.