சென்னை,
மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் திருப்பி தாக்குவதால் 12 நாட்களாக போர் பதற்றம் நீடித்து வருகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு வரும் சரக்கு கப்பல்களை ஈரான் தடுத்து நிறுத்தியது.
இதனால், உலக அளவில் பெரும்பாலான நாடுகளில், எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது. குறைந்த அளவே கையிருப்பு வைத்திருந்த நாடுகளில் அதன் தாக்கம் உடனடியாக எதிரொலிக்க தொடங்கியது. அந்த வகையில், மக்கள் வளம் அதிகம் கொண்ட இந்தியாவில், எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சமும் நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பீதியில் சென்னையின் பல்வேறு இடங்களில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப விற்பனை நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் அதிகளவில் பெட்ரோல் வாங்கியதால் பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் வாட்ஸ்-அப் வதந்திகளை நம்பி அளவுக்கு அதிகமாக பெட்ரோல் போடுவதாலேயே சில இடங்களில் செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? என்பது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தால் நாடு முழுவதும் இயக்கப்படும் அனைத்து எரிபொருள் நிலையங்களும் தொடர்ந்து திறந்திருக்கும், வழக்கம்போல் செயல்படும். பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. மேலும், விநியோக நடவடிக்கைகள் நாடு முழுவதும் சீராக நடைபெற்று வருகின்றன. வாடிக்கையாளர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், எரிபொருள் நிலையங்களில் தேவையற்ற கூட்டத்தைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.