AI Image 
தமிழக செய்திகள்

சென்னை வந்த ரெயிலில் செல்போன் பவர் பேங்க் வெடித்து சிதறியது - பயணிகள் அலறல்

ரெயில் பெட்டி சேதம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னை வந்த ரெயிலில் செல்போன் பவர் பேங்க் வெடித்து சிதறியது. இந்த வெடி சத்தத்தை கேட்டு பயணிகள் அலறியடித்து கொண்டு அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி நேற்று முன்தினம் இரவு பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், ஜோலார்பேட்டை வழியாக காட்பாடி ரெயில் நிலையத்தை கடந்து சென்றது.

பவர் பேங்க் வெடித்தது

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே இரவு 10.40 மணிக்கு வந்து கொண்டு இருந்தபோது பொதுப்பெட்டியில் இருந்து பயணி ஒருவர் தனது செல்போனை, பவர் பேங்கில் சார்ஜ் போட்டார். அப்போது பவர் பேங்க் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இரவு நேரம் என்பதால் தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து கொண்டு எழுந்தனர்.

ரெயிலை நிறுத்தினர்

பயத்தில் சிலர் ரெயில் பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். உடனடியாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவம் நடந்த ரெயில் பெட்டிக்கு வந்தனர். ரெயிலை நிறுத்தியது ஏன்? என அங்கு இருந்த பயணிகளிடம் விசாரித்தனர்.

அப்போது பயங்கர வெடி சத்தம் கேட்டதால் பயந்து ரெயிலை நிறுத்தினோம் என பயணிகள் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்தபோது, செல்போன் பவர் பேங்க் வெடித்ததால் ரெயில் பெட்டியில் சிறிது சேதம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

வழக்குப்பதிவு

இந்த நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு ரெயில் அரக்கோணம் நோக்கி வந்தது. அரக்கோணத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியது. ரெயில் பெட்டி சேதம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT