தமிழக செய்திகள்

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் பக்தர்களுக்கு தடை

வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு இன்று முதல் தடை விதித்து வனத்துறை அறிவித்து உள்ளது.

கோவை,

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டியில் புகழ் பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலையொட்டி 7-வது மலையில் சுயம்புலிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் காட்சியளிக்கிறார். இதனால் இந்த மலை மீது பக்தர்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

இது தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையில் திடீரென்று காலநிலை மாற்றம் ஏற்படும். இதனால் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக தினமும் ஏராளமான பக்தர்கள் மலைமீது சென்று வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) முதல் வெள்ளியங்கிரி மலையேறி செல்ல பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம் பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதிவரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கோவையில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் இனிவரும் காலங்களிலும் அதிகளவில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இன்று முதல் வெள்ளியங்கிரி மலையேறி செல்ல பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் இந்த அறிவிப்பை மீறி யாரும் மலையேற முயற்சிக்க வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.