சென்னை,
170 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற விமானத்தில் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி நடைபெற்றபோது, அசாத்திய துணிச்சலுடனும், சாதுரியத்துடனும் செயல்பட்டு 170 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதான ‘குடிமக்கள் வீர தீர செயலுக்கான ஜனாதிபதி விருது’ அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிக்கிறது.
ஆபத்தான சூழ்நிலையிலும் பதற்றத்திற்கு இடமளிக்காமல், தனது உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் பயணிகளின் பாதுகாப்பை முன்னிறுத்திச் செயல்பட்ட அவரது வீரமும், கடமையுணர்வும் போற்றுதலுக்குரியவை. 170 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய அவரது துணிச்சலான செயல், மனித உயிர்களின் மதிப்பையும், தன்னலமற்ற சேவையின் மகத்துவத்தையும் உலகிற்கு உணர்த்துகிறது.
தனது வீரச் செயலால் பல உயிர்களைக் காப்பாற்றி, சர்வதேச அளவில் உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள விமானி ஸ்மித் மச்சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது துணிச்சலும், அர்ப்பணிப்பும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.