தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 12 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்

முதற்கட்டமாக 60,500 மரக்கன்றுகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை,

சென்னை மாநகராட்சியில் பசுமைப் பரப்பினை அதிகரித்திடும் வகையில் நடப்பு ஆண்டில் 12 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

19 நர்சரி தோட்டம்

இதற்காக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்களில் 19 நர்சரி தோட்டம் வாயிலாக 121 நாற்றங்கால் பண்ணைகள் அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் பசுமை பரப்பினை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாட்டில் திறந்தவெளி நிலங்கள், பூங்காக்கள், சாலை மைய தடுப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் மற்றும் செடிகள் நட்டு தொடர்ந்து பராமரித்திட மாவட்ட கலெக்டர் மாநாட்டில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அழகுபடுத்தும் பணி

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள திறந்தவெளி நிலங்கள், பூங்காக்கள், சாலை மையத்தடுப்புகள், போக்குவரத்து தீவுத்திட்டுகள், சாலையோர பூங்காக்கள் மற்றும் மாநகராட்சி அலுவலக வளாகங்கள், பள்ளி கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் மற்றும் அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் குறுவகை செடிகள் போன்றவை கொண்டு அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பராமரிப்பு

கடந்த ஆண்டில் சென்னை மாநகராட்சி மூலமாக, 44,165 எண்ணிக்கையிலான 28 வகையான நாட்டு வகை மரக்கன்றுகள் மற்றும் தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, 42,635 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் என மொத்தம் 86,800 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலை மைய தடுப்புகள், போக்குவரத்து தீவுத்திட்டுகள், வனத்துறையின் மூலம் 10,000 எண்ணிக்கையிலான அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் குறுவகை செடிகள் நடவு செய்யப்பட்டு சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மரக்கன்றுகள் நடவு

சென்னை மாநகராட்சி வனத்துறையுடன் இணைந்து தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-125க்குட்பட்ட கைலாசபுரம் இடுகாடு/சுடுகாடு (மைலாப்பூர்) மற்றும் பெருங்குடி மண்டலம், மாடம்பாக்கம் ஆகிவற்றில் இதற்கான நர்சரி பண்ணைகள் உருவாக்கப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் ஜூன் மற்றும் ஜூலை 2026 மாதத்தில் 1,00,000 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு, அதற்காக மேற்கண்ட நர்சரியில் இருந்து இதுநாள்வரை 40,993 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் பெறப்பட்டு மண்டலம் 1 முதல் 15 வரை நடவு செய்யப்பட்டு மண்டலங்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பூங்கா

மேலும், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் முதற்கட்டமாக திருவொற்றியூர் மண்டலம், வார்டு-7க்குட்பட்ட எம்.ஆர்.எப். பூங்கா மற்றும் தாழங்குப்பம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பூங்கா, மணலி மண்டலம், வார்டு-19, 2ஆவது பிரதான சாலையில் உள்ள எம்.எம்.டி.ஏ. பூங்கா, மாதவரம் மண்டலம், வார்டு-24க்குட்பட்ட சில்வர் ஸ்கை பூங்கா, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-43க்குட்பட்ட சி.டி.எச். பூங்கா, இராயபுரம் மண்டலம், வார்டு-51க்குட்பட்ட மின்ட் பூங்கா, வார்டு-58க்குட்பட்ட மை லேடிஸ் நர்சரி, திரு.வி.க.நகர்.

60,500 மரக்கன்றுகள்

மண்டலம், வார்டு-75க்குட்பட்ட ஹெர்பல் பூங்கா, அம்பத்தூர் மண்டலம், வார்டு-83க்குட்பட்ட கலெக்டர் நகர் காலி இடம், அண்ணாநகர் மண்டலம், வார்டு-103க்குட்பட்ட அண்ணாநகர் டவர் பூங்கா, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-122க்குட்பட்ட டர்ன்புல்ஸ் சாலை பூங்கா, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-133க்குட்பட்ட நடேசன் பூங்கா, வார்டு-127க்குட்பட்ட ஜெய் நகர் பூங்கா, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-150க்குட்பட்ட எம்.எஸ்.சுவாமி நாதன் பூங்கா, ஆலந்தூர் மண்டலம், வார்டு-157க்குட்பட்ட எல் & டி பூங்கா, அடையாறு மண்டலம், வார்டு-173க்குட்பட்ட இந்திரா நகர், 4வது குறுக்குத் தெரு மற்றும் தொல்காப்பியப் பூங்கா, பெருங்குடி மண்டலம், வார்டு-191க்குட்பட்ட மாடம்பாக்கம் நர்சரி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-198க்குட்பட்ட தேவராஜ் நகர், 2ஆவது பிரதான சாலையில் உள்ள பூங்கா என 19 எண்ணிக்கையிலான பூங்காக்களில் 121 நாற்றங்கால் பண்ணைகள் (Nursery Bed) உருவாக்கப்பட்டு, அதன் மூலம் தற்போது முதற்கட்டமாக 60,500 மரக்கன்றுகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் நீர்மருது, பாதாம், சரக்கொன்றை, பூவரசு, பூங்கன், வேப்பம், குண்டு மணி உள்ளிட்ட பல்வகை நாட்டு மரக்கன்றுகள் உருவாக்கப்படுகிறது.

நடவடிக்கை

சென்னை நுழைவாயில், மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் கிண்டி கத்திப்பார சாலை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் சுமார் 6 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலையோர பூங்காக்கள், சுவற்றில் வர்ணம் பூசுதல், கண்கவரும் அழகிய வண்ணங்களுடன் மிளிரக்கூடிய மின்விளக்குகள் மற்றும் சாலை மைய தடுப்புகளில் அழகிய வண்ணப்பூ பூக்கும் மற்றும் அழகிய வண்ண இலைகளுடன் கூடிய செடிகள் கொண்டு அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.