சென்னை,
கோடை கால விடுமுறையையொட்டி, ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகமும் பேக்கேஜ் கட்டணத்தில் சேலம் - ஏற்காடு இடையே சுற்றுலா பஸ்சை அறிமுகப்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் (7-ந் தேதி) முதல், தினமும் காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சுற்றுலா பஸ், கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு மீண்டும் சேலம் புதிய பஸ் நிலையத்திலேயே பயணிகளை இறக்கிவிடும். இதற்கு முழுக் கட்டணமாக ரூ.300, அரை கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவை அரசு போக்குவரத்து கழக முன்பதிவு மையத்தின் வழியாகவும், www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலமாகவும் செய்யலாம்.