விழுப்புரம்,
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசின் தைலாபுரம் இல்லத்தில், ‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ என அறிவுறுத்தும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தைலாபுரம் இல்ல வளாகத்தின் நுழைவு வாயில் கதவு முன்பு ‘அரசியல் துறவறம்’ என்ற தலைப்பில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த ஜூலையில் நடைபெற்ற தனது 88-வது பிறந்தநாள் விழாவில் பேசிய ராமதாஸ், “இன்று முதல் அரசியல் துறவறம் பூணுகிறேன். அரசியல் துறவறம் என்று சொன்னால், நான் அரசியலை பேசமாட்டேன். அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரை ராமதாஸ் சந்தித்து உரையாடி வருகிறார்.
மேலும், சந்திக்க வருபவர்கள் அவரிடம் அரசியல் பேச முயற்சிக்கின்றனர். இந்நிலையில தைலாபுரம் இல்ல வளாகத்தின் நுழைவு வாயில் கதவு முன்பு அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு பலகையில், தினசரி காலை 10 மணி முதல் முற்பகல் 12 மணி வரை ராமதாசை சந்திக்கலாம் என்றும், அவர் அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால் சந்திக்க வரும் பார்வையாளர்கள் “தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.