சென்னை,
சென்னை மணலி கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்த ஜீவானந்தம் (17 வயது). பிளஸ்-1 படித்து வந்தார். இவர் தனது நண்பர்களான யுவராஜ் (19 வயது), ரவி (19 வயது), அஜித் குமார் (20 வயது) ஆகிய 3 பேருடன் நேற்று மாலை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் குளிக்க சென்றுள்ளார். மீன்பிடி தூண்டில் வளைவு அருகே 4 பேரும் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ராட்சத அலையில் சிக்கி யுவராஜ் மற்றும் ஜீவானந்தம் மாயமாகினர்.
கரையில் இருந்த நண்பர்களின் அலறல் சத்தம் கேட்கவே அங்கிருந்த மீனவர்கள் விரைந்து வந்து கடலில் தத்தளித்த யுவராஜை மீட்டனர். ஆனால் ஜீவானந்தம் கடலில் மூழ்கி மாயமாகி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த எண்ணூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மிதவைகளை பயன்படுத்தி மாயமான மாணவரை தேடினர். இருள் சூழ்ந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் ஜீவானந்தத்தின் உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து, எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.