தமிழக செய்திகள்

லேப்டாப்புக்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவர் உயிரிழப்பு

சீனிவாசன், திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

திருவள்ளூர்,

லேப்டாப்புக்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

மின்சாரம் தாக்கியது

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு கற்குழாய் சாலை பகுதியை சேர்ந்தவர் செந்தில். பெயிண்டர். இவருக்கு கவிதா என்கிற மனைவியும், சீனிவாசன் (15), ஜீவா, ரித்தி என 3 மகன்களும் உள்ளனர். மூத்த மகனான சீனிவாசன் திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் சீனிவாசன் தனது நண்பரின் லேப்டாப்பை வாங்கி கொண்டு வந்து வீட்டில் வைத்து கேம் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து சார்ஜ் இல்லாததால் லேப்டாப்பை சார்ஜ் போடுவதற்காக சென்றார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் மயங்கி கீழே விழுந்தார்.

போலீசார் விசாரணை

அதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செந்தில் தனது மகனை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சீனிவாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.