தமிழக செய்திகள்

பைக் விபத்தில் பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு: வாலிபர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்த பிளஸ்-1 மாணவியின் பைக்கும் எதிரே வந்த மற்றொரு பைக்கும் மோதி விபத்து ஏற்பட்டது.

கன்னியாகுமரி,

‘கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே மேக்காமண்டபம், மாறாங்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன். இவர் தற்போது பனவிளை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கடைசி மகள் அர்ச்சனா (வயது 16). இவர் தக்கலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு (பிளஸ்-1) படித்து வந்தார்.

கடந்த 30-ம் தேதி இரவு, அர்ச்சனா தனது பைக்கில் நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தார். வில்லுக்குறி அருகே வெள்ளச்சிவிளை என்ற பகுதியில் சென்றபோது, எதிரே அதிவேகமாக மற்றொரு பைக் வந்தது. எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் அர்ச்சனா தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்குப்போராடிய அவரை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அர்ச்சனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், விபத்தை ஏற்படுத்தியதாக வில்லுக்குறி மேலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ரெதீஷ்(21) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.