சேலம்,
சேலம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி கலைச்செல்வி. இவர்களது மகள் விஜயலட்சுமி (வயது 17). இவர் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்,மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரை பிரிந்து கலைச்செல்வி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
விஜயலட்சுமி தந்தையுடன் வசித்து வந்தார். மேலும் அவர் பெற்றோர் பிரிந்து வாழ்ந்ததால் மனவேதனை அடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜயலட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் ஒரு அறையில் கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டுக்கொண்டு அங்கிருந்த ஜன்னல் கம்பியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். பின்னர் விஜயலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கிச்சிப்பாளையம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.