சென்னை,
சென்னை வானகரம் அருகே முன்விரோதம் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வானகரம் பகுதியைச் சேர்ந்த மாணவர் அபிஷேக் (வயது 18). இவர் போரூர் அருகே உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் இவரது நண்பரான 21 வயதுடைய ஷ்யாம் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது.
இருசக்கர வாகனத்தின் சாவியை வலுக்கட்டாயமாக பிடுங்குவது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) இரவு அபிஷேக் மற்றும் ஷ்யாம் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதையடுத்து கைகலப்பாக மாறியது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இந்த முன்விரோதம் காரணமாக ஆத்திரமடைந்த ஷ்யாம், இன்று (வியாழக்கிழமை) மாணவர் அபிஷேக்கை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அபிஷேக், ரத்த காயங்களுடன் வானகரம் காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த சம்பவம் குறித்துத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, போலீசார் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து F-5 வானகரம் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, தலைமறைவாக உள்ள நண்பர் ஷ்யாமைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.