தமிழக செய்திகள்

நாகர்கோவிலில் பெண் ஓவியர் வரைந்த ஓவியத்தில் கையெழுத்திட்ட பிரதமர் மோடி

மூதாட்டியிடம் பிரதமர் மோடி தலையை குனிந்து ஆசி பெற்றார்.

குமரி,

நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்க ளுக்கு ஆதரவாக நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது பலர் நினைவு பரிசுகளை வழங்கினர். அப்போது இடலாக்குடி பட்டாரியார் நெடுந்தெருவைச் சேர்ந்த சந்தியாதேவி என்ற ஓவியர், தான் கைப்பட வரைந்த மோடியின் உருவப்படத்தை வைத்திருந்தார்.

அதை பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் வாங்கி மோடியிடம் கொடுத்தனர். அதை வாங்கி பார்த்த அவர், புகைப்படத் தின் பின்பகுதியில் கையெழுத்திட்டார். பிறகு சந்தியாவிடம் கொடுக்கும்படி பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்தார். பாதுகாப்பு அதிகாரிகள் அதை வாங்கி திரும்பவும் சந்தியாவிடம் கொடுத்தனர். அதை அவர் பொக்கிஷமாக கருதி, பாதுகாப்பாக வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

இதேபோல் ஒருவர், மோடி தனது தாயாரிடம் ஆசி பெறுவதைப் போன்ற புகைப்படத்தை காண்பித்தார். அதை மோடி பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் வாங்கி வைத்துக் கொண்டார். ரோடு ஷோ நிகழ்ச்சி வடசேரியில் நிறைவடைந்ததும் பிரதமர் மோடி அங்கு திரண்டு நின்ற தொண்டர்கள், பொதுமக்களிடம் கை கொடுத்து மகிழ்ந்தார். அந்த சமயத்தில் பிரதமரை பார்ப்பதற்காக நின்ற முதியவர் மற்றும் மூதாட்டியிடம் பிரதமர் மோடி தலையை குனிந்து ஆசி பெற்றார். மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நலம் விசாரித்தார்.

பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியை தொண்டர்கள், பொதுமக்கள் பார்க்க வசதியாக ஆங்காங்கே பெரிய திரைகள் வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிரதமர் மோடியுடன் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஹெலிகாப்டரில் குமரி மாவட்டத்துக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.