தமிழக செய்திகள்

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் விஜய்யும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

சென்னை,

பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வருகிறார்.

பிரதமர் மோடி மெட்ரோ திட்டம்

தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். அவர் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் போரூர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்கிறார். அங்கு அவரை முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர். ரூ.750 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரெயில் வழித்தடத்தில், போரூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி மெட்ரோ ரெயில் நிலையம் வரை பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் விஜய்யும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்து ரையாடுகிறார். அதன்பிறகு, அங்கிருந்து புறப்படும் பிரதமர் மோடி, பகல் 12.15 மணிக்கு சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு வருகிறார். அங்குள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்துகிறார். பின்னர், ஐ.ஐ.டி.யில் உள்ள மூளை ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிடுகிறார். இதைத்தொடர்ந்து, ஐ.ஐ.டி. வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார். மேலும், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பயிற்சி மையம்

முன்னதாக, ஐ.ஐ.டி. வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயிற்சி மையத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, பிரதமர் மோடி நந்தம்பாக்கம் செல்கிறார். அங்கு மதியம் 3 மணியளவில் நடைபெறும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து, அங்கிருந்து கார் மூலம் விமான நிலையத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து டெல்லிக்கு புறப்படுகிறார்.

ரோடு ஷோ

சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை முன்னிட்டு, அவர் செல்லும் வழித் தடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத் தில் இருந்து போரூர் மெட்ரோ ரெயில் நிலையம் வரையிலும், அங்கிருந்து சென்னை ஐ.ஐ.டி. வரையிலும், பின்னர் ஐ.ஐ.டி.யில் இருந்து நந்தம்பாக்கம் செல்லும் வழித்தடத்திலும் தமிழக பா.ஜனதா சார்பில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த வழித்தடங்களில் 2 இடங்களில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திலும் அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT