சென்னை,
வரும் 11ம் தேதி டெல்லியில் இருந்து சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் வெளியாகி உள்ளது
சென்னையில் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் (26 கிலோ மீட்டர்) வட பூந்தமல்லி -போரூர் வரையிலான 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் முடிந்து மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்பு சான்றிதழை ரெயில்வே வாரியம் வழங்கியது. இதேபோல, போரூர் - வடபழனி பழனி இடையில் அனைத்துப்பணிகளும் முடிவடைந்து கடந்த ஜனவரி மாதம் 11-ந்தேதி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது.
அப்போது, சிக்னல் அமைப்பு, தண்டவாள செயல்திறன், ரெயில் இயக்கம், உறுதித்தன்மை உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டன. இதனால், பூந்தமல்லி வடபழனி இடையில் மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான அனைத்து சோதனை பணிகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முடித்தது. இதனை தொடர்ந்து, ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இவ்வழித்தடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இவ்வழித்தடத்தில் ரெயிலை இயக்குவதற்கான ஒப்புதலும் கிடைத்தது.
கடந்த பிப்ரவரி மாதமே பூந்தமல்லி - வடபழனி வரையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தரப்பில் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட நிகழ்ச்சி தேதிக்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால், அனைத்து பணிகள் முடிந்த நிலையிலும் பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதிலும் கால தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், வரும் அக்டோபர் 11-ந்தேதி பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அப்போது, 3 தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகளையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில் வரும் 11ம் தேதி டெல்லியில் இருந்து சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டம் வெளியாகி உள்ளது.
இதன்படி 11ம் தேதி காலை 8 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து கிளம்பி காலை 10.55 மணிக்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி. பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பூந்தமல்லி ஹெலிபேடை சென்றடைகிறார்.
காலை 11.30 மணிக்கு பூந்தமல்லியில் இருந்து போரூர் நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடி பயணிக்கிறார். மதியம் 12 மணிக்கு போரூர் மெட்ரோவில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தை சென்றடைகிறார். சென்னை ஐ.ஐ.டி.யில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிறுவனர்களுடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர் ஐ.ஐ.டி. வளாகத்தில் இருந்து புறப்பட்டு அருகில் உள்ள கேந்திரிய வித்யாலயா மைதானத்திற்கு செல்கிறார். இதனிடையே சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸ் வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார்
பிற்பகலில் இசைஞானி இளையராஜாவின் இசைச் சிறப்பு மையத்தை தொடங்கிவைக்கிறார். ( சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையம் சார்பில் கடந்த 2024ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது).
பின்னர் மாலையில் சென்னை கன்வென்ஷன் சென்டரில் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்படுகிறார்.