மதுரை,
மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதுரைக்கு வருகை தந்துள்ளார். பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த விழாவில் ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இதன்படி, சென்னை கடற்கரை-எழும்பூர் இடையேயான 4-வது வழித்தடம், காரைக்குடி உள்ளிட்ட 8 மறுசீரமைக்கப்பட்ட ரெயில் நிலையங்கள், கும்பகோணம், வேலூர், ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் ஆகாஷ்வாணி பண்பலை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மரக்காணம்-புதுச்சேரி பிரிவு, பரமக்குடி-ராமநாதபுரம் பிரிவு 4 வழிச்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர் எ.வ.வேலு, மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரன கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டார்.
இதற்கிடையில் பிரதமரின் வருகையையொட்டி திருப்பரங்குன்றம் கோவில், மலைப் பகுதிகளில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும் எனவும், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் எனவும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.